பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து:37 பேர் பலி
மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸ், தவாவோ நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் தவாவோ என்ற நகர் அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், கொண்டாட்டம் தொங்கி உள்ளது. இதையொட்டி, கிறிஸ்துமசுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அந்நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று காலை ஏராளமான மக்கள் குவிந்தனர்.
அப்போது, அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் திடீரென தீ பிடித்தது. இது மளமளவென பரவியதை கண்டு அதிர்ச்சயடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தப்பிக்க ஓடினர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கட்டிடத்திற்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த கட்டிடத்திற்குள் சிக்கி இருக்கும் 37 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரின் மகனும், துணை மேயருமான பாவ்லோ டூடெரெட் பேஸ்புக்கில், 37 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதில் குறிப்பிட்டிருந்தார்.