வாணியம்பாடி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பாறைகொல்லி வட்டம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம். 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதான இவருடைய மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த சுதாகர்(21) என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.
அக்கம்பக்கத்தினர், இது குறித்து வேலூர் சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறையினர் திருமணத்தை நிறுத்த மணமகன் சுதாகர் வீட்டிற்கு சென்றனர்.
அதிகாரிகள் வருவதை முன் கூடியே அறிந்த இருவீட்டாரும் தப்பி தலைமறைவானார்கள். போலீசார் அவர்களை தேடி பிடித்து வாகனத்தில் அழைத்து கொண்டு மணமகன் வீட்டிற்கு வந்தனர்.
பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறிய அதிகாரிகள், 18 வயத்திற்கு பின்னர்தான் திருமணம் நடத்த வேண்டும் என மணமக்கள் வீட்டாரை எச்சரித்து சென்றனர்.