டிக்கெட் வடிவில் கல்யாண அழைப்பிதழ்.. சிஎஸ்கே அணி ரசிகர் அசத்தல்!
சென்னை சூப்பர் கிங்க்ஸ்ன் தீவிர ரசிகர் ஒருவர் தனது திருமண பத்திரிக்கையை டிக்கெட் வடிவில் உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் எந்தவொரு இடத்தில் விளையாடினாலும் இதுபோன்ற தீவிர ரசிகர்கள் அங்கு சென்று போட்டியை ரசிப்பது வழக்கம். இதுபோன்ற தீவிர ரசிகர் ஒருவர்தான் வினோத். இவருக்கு இன்று திருமணம். திருமணத்திற்கான அழைப்பிதழை சிஎஸ்கே அணியின் டிக்கெட் வடிவில் வடிவமைத்து அசத்தியுள்ளார்.
இவரது அழைப்பிதழை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அத்துடன் வித்தியாசமான முறையில் அழைப்பிதழை அச்சிட்ட சூப்பர்ஃபேன் ரசிகருக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் வினோத் கூறுகையில் ‘‘டோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகரான நான், எனது திருமண அழைப்பிதழை வித்தியாசமான முறையில் அச்சிட விரும்பினேன்.
இதுகுறித்து கிராபிக் டிசைனரான எனது நண்பரிடம் பேசினேன். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்தான். இருவரும் இந்த அழைப்பிதழை வடிவமைத்தோம்’’ என்றார்.
மேலும், 2015-ம் ஆண்டு சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் அதிகாரிகள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் எனது பெயரை சொல்லி அழைத்தார். அப்போது டோனி கையெழுத்திட்ட பேட் எனக்கு பரிசாக வழங்கப்பட்டது’’ என்றார்.