தொடரும் பாலியல் வன்கொடுமை...முடிவு என்ன..?
பெண் நாட்டின் கண், வீட்டின் கண் என்று பேசியதெல்லாம் போதும். வெறும் வார்த்தைகள் எதையும் தராது. நாடு, நதி என அனைத்திற்கும் பெண் பெயரை வைத்துவிட்டு அவற்றை சூறையாடுவதிலேயே காலத்தைக் கடக்கின்றோம்.
பிரச்னை இல்லா இடம் இல்லை எனினும் பிரச்னை வராமல் காக்க இயலும். வரும்முன் காப்பது சால சிறந்தது. பிறந்த பெண் குழந்தை முதல் முதிர்ந்த பெண் வரை அனைவருக்கும் பாலியல் வன்கொடுமை நடக்கின்றன.
தினம் தினம் யூகிக்க முடியா நிலையில் பாலியியல் வன்கொடுமை. வயதுள்ள பெண்களை விட சிறுமிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை அனைவரையும் தன் நண்பன், நண்பி என்றே என்னும் இருந்தாலும் பசுந்தோல் போர்த்திய புலி நம்மிடையே உலவிக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களை கண்டுபிடிப்பதில்லை நம் வாழ்க்கை. அவர்களிடம் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதே புத்திசாலிதனம்.
குழந்தையை பெற்ற நாம் அவர்களுக்கு சில உண்மைகளைச் சொல்லி வளர்க்க வேண்டும். வயது காட்டி உண்மையை மறைக்கு போது இந்த உலகம் அவர்களுக்கு உண்மையை சொல்லாமல் செய்து காட்டிவிடுகிறது.
இதோ என்னால் கூற முடிந்த சில தகவல்கள், கண்டிப்பாக உங்கள் குழந்தையை நல்வழிப் படுத்துவதோடு பாலியல் வன்கொடுமை உண்டாகும் சூழ்நிலையை தவிர்த்துக் கொள்ள முடியும்.
பெண் குழந்தைகளை யாருடைய மடியிலும் அமரக்கூடாது என முதலில் சொல்லிக்கொடுங்கள். யார் முன்னிலையிலும் உடை மாற்றக்கூடாது என சொல்லிக் கொடுங்கள். சிறியவர்களாக இருந்தாலும் சரி,பெரியவர்களானாலும் சரி.
குழந்தைகளுக்கு உன்னுடைய கணவன், உன்னுடைய மனைவி என்று சொல்லிப் பழக்காதீர்கள். பின் பெரிய விளைவை ஏற்படுத்திவிடும்.
உங்கள் குழந்தைக்கு ஒரு சில நபரை பிடிக்கவில்லை என்றால் அவரிடம் பழக அனுமதிக்காதீர்கள் மற்றும் அவரிடம் அழைத்து செல்லாதீர்கள்.
குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும்.
மேலும், அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும்.
நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.
குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.