பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கிய திமுக நிர்வாகி
பெரம்பலூரில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண்ணை திமுக நிர்வாகி செல்வகுமார் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் திமுக மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மே மாதம் 25ஆம் தேதி அழகு நிலையத்திற்குள் நுழைந்த திமுகவின் பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான செல்வகுமார் என்பவர், குடிபோதையில் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.
முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கடுமையாக தாக்குகிறார். அந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து சத்யா அளித்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, செல்வகுமாரை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.