புழல் சிறையை சொகுசாக மாற்றிய கைதிகள்
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்காக, நட்சத்திர விடுதி போன்று சிறைகள் வடிவமைக்கப்பட்டது போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தீவிரவாதிகள், நாட்டை உளவு பார்த்தவர்கள், போதை பொருள் கடத்தல் காரர்கள் என பெரும் குற்றவாளிகள், புழல் சிறையின், மிகவும் பாதுகாப்பான பிரிவுகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரிவுகளில் வெளியான புகைப்படங்கள் மூலம், கைதிகள், செல்போன்கள் பயன்படுத்துவது, டிசர்ட், ஷார்ட்ஸ் என வீடுகளில் இருப்பதை போன்றே சொகுசாக வாழ்வது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதே போல, பல வகையான உணவுகளும், நட்சத்திர விடுதிக்கு நிகரான படுக்கை வசதிகளும் இருப்பதை புகைப்படங்களில் காண முடிகிறது. இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா,"புழல் சிறை தொடர்பாக வெளியான புகைப்படங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டவை.
ஒரு வாரத்திற்கு முன்பே சோதனை நடத்தி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.