வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக் கொண்ட பாண்ட்யா
இங்கிலாந்து தொடரில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அடிமேல் அடி வாங்கிய இந்திய அணியை நினைத்து வயிற்றெரிச்சலில் உள்ளனர் இந்திய ரசிகர்கள். ஐந்து டெஸ்ட் கொண்ட தொடரை 1 - 4 என்ற கணக்கில் இழந்த அணியில் இடம் பிடித்திருந்தவர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.
இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மொத்தத்தில் அதிக பட்சமாக 108 ரன்கள் எடுத்துள்ள பாண்ட்யாவின் டெஸ்ட் ரன் சராசரி 31.29 ஆகும். கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட்டில் ஆடிய அணியில் இவர் இடம் பெறவில்லை. ஏனைய போட்டிகளில் 4, 18, 52 (அவுட் இல்லை), 11 என்று ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில், "மிகுந்த ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பினாலும் இது நன்கு போராடிய தொடராகும்.சில நாட்கள் இடைவெளியில் ஆசிய கோப்பை போட்டிகளுக்காக மீண்டும் பறக்க வேண்டும். அதற்கு முன்பு சில நாட்கள் வீட்டில் இருக்கும் நல்ல தருணம்" என்று பதிவு செய்திருந்தார்.அதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்துப் போய்விட்டனர். பலர் கோபத்தில் பின்னூட்டமிட்டுள்ளனர்.
"அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவில்லை. பார்ப்பதற்கு ராப் பாடகர் போல் இருக்கிறார். அவரை ராப் இசைக்குழுவில் சேர்த்துவிடுங்கள்""குடிமையத்தில் (பார்) சரக்கு தருபவர் போலிருக்கிறார்""குற்ற கும்பலில் ஒருவர் (கேங்க்ஸ்டர்) போலிருக்கிறார்""ரொம்ப பண்ணிக்காதீங்க... முதல்ல நல்லா கிரிக்கெட் விளையாடுங்க"
என்பது உள்ளிட்ட ஆயிரக்கணக்காக பின்னூட்டங்களை இட்டுள்ளனர்.வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட கதையாகி விட்டது பாண்ட்யாவுக்கு!