சாட்சிகள் இல்லாமல் வன்முறை நிகழ்த்த அதிமுக சதி - ராமதாஸ்
சாட்சிகள் இல்லாமல் வன்முறை நிகழ்த்த அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் இந்த சதியை அனுமதிக்கக்கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றது. இரண்டாம் சுற்றுகள் எண்ணப்படும்போது டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள ராமதாஸ், “ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வன்முறையாளர்களை வெளியேற்றி விட்டு அமைதியாக வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து பத்திரிகையாளர்களை வெளியேற்ற முயற்சி. சாட்சிகள் இல்லாமல் வன்முறை நிகழ்த்தத் திட்டம். இந்த சதியை அனுமதிக்கக்கூடாது.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் சுற்றிலேயே ஆளுங்கட்சி வன்முறை: முதலில் பண பலத்தையும், பின்னர் படைபலத்தையும் பயன்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.