ஆன்லைன் கொள்ளையர்களிடம் ஏமாந்த ஆசிரியை

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, ஏடிஎம் ரகசிய எண்ணை பெற்று ஆசிரியை ஒருவரின் கணக்கிலிருந்து ரூ.50,000 எடுக்கப்பட்டுள்ளது.

காட்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஆஸிஃபா ஃபாத்திமா (வயது 27). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இவருக்கு புதிதாக வங்கியிலிருந்து பணம் எடுக்கக்கூடிய ஏடிஎம் அட்டை வந்தது. பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், வங்கியிலிருந்து பேசுவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ஏடிஎம் அட்டை விவரத்தை சரி பார்ப்பதற்காக, அட்டையின் மேல் உள்ள எண்ணையும், அதற்கான ரகசிய எண்ணையும் கூறும்படி கேட்டுள்ளார்.

ஃபாத்திமா அந்த விவரங்களை கூறிய சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கிலிருந்து இரு முயற்சிகளில் ரூ.50,000 எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வந்தது. அதிர்ந்து போன ஆசிரியை, தாம் கணக்கு வைத்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகி விவரத்தை கூறினார்.

வங்கி அதிகாரிகள், தாங்கள் ஒருபோதும் தொலைபேசியில் விவரங்களை கேட்பதில்லை என்று மறுத்தனர். அதைத் தொடர்ந்து ஆசிரியை ஃபாத்திமா, வேலூர் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

"உங்கள் வங்கி கணக்கு பற்றிய விவரங்கள், ஏடிஎம் என்னும் பணம் எடுக்கும் அட்டை மற்றும் கிரடிட் கார்டு என்னும் கடன் அட்டை ஆகியவற்றின் சங்கேத எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வங்கிகளிலிருந்து இந்த விவரங்களை ஒருபோதும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை," என்று பல்வேறு விதங்களில் அறிவுறுத்தப்பட்டும், படித்தவர்கள் கூட ஆன்லைன் கொள்ளையர்களிடம் ஏமாறுவது தொடர்ந்து வருகிறது.

More News >>