கைகொடுத்த கடம்பவேல்ராஜாhellip சிரிக்க வைக்க தவறிய சீமராஜா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களை தொடர்ந்து, பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்தவுடன், ஒரு மாஸ் காமெடி எண்டர்டெயினர் இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்றனர். ஆனால், சீமராஜா படத்தில் மாஸே தமாஸாகத்தான் இருந்தது.

வழக்கமான திரைக்கதை படத்தை ரசிக்க வைக்காமல் நகர்கிறது. சிவகார்த்திகேயன், சூரி காமெடி முந்தைய படங்களில் ஒர்க்கவுட் ஆன அளவுக்கு இப்படத்தில் கை கொடுக்கவில்லை. எப்போதாவது தான் தியேட்டர்களில் சிரிப்பு சத்தம் கேட்கிறது.

சமந்தா, சிலம்பம் சுற்றும் பி.டி. டீச்சராக வருகிறார். பாடல்களுக்கு மட்டுமே பயன்படும் ரோலாக, அவரது கதாபாத்திரம் எழுதப்பட்டதால், அவரது ரோலும் படத்திற்கு பெரிதளவில் கைக் கொடுக்கவில்லை.

சிங்கம்பட்டி சமாஸ்தானத்தின் மன்னர் வாரிசாக வரும் சிவகார்த்திகேயன் உடைகள் மற்றும் தோற்றத்தில் ஜமீன் பரம்பரையாக காட்சியளிக்கிறார். ஆனால், தந்தையாக வரும் நெப்போலியன் சாதாரணமாகவே படம் முழுக்க வந்து செல்கிறார்.

படத்தின் மெயின் வில்லன் லாலு, அதிகம் பேசுவதை விட அவரது மனைவியாக நடித்துள்ள சிம்ரன், அதிகம் பேசுகிறார். ஆனால், அவரது கதாபாத்திரம் திமிரு படத்தின் ஸ்ரேயா ரெட்டியை தான் நினைவு படுத்துகிறது.

முதல் பாதியில் நாயகி பின்னால், சுற்றும் நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன், இரண்டாம் பாதியில் வரும் 20 நிமிட பிளாஷ்பேக்கில், தமிழ் மன்னன் கடம்பவேல்ராஜாவாக கலக்கியுள்ளார். ஆனால், அந்த போர்ஷன், சீமராஜா படத்திற்கு சம்மந்தமே இல்லாதது போல், எழுதப்பட்டது படத்திற்கு பலம் கூட்ட தவறிவிட்டது.

சரித்திர போர்ஷனில் செலுத்திய கவனம் மற்றும் நேர்த்தியை, இயக்கு நர் பொன்ராம், படம் முழுவதும் செலுத்தியிருந்தால், சீமராஜா, பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியிருக்கும்.

இமானின் இசை, கீர்த்தி சுரேஷின் கேமியோ ரோல், சிவகார்த்திகேயனின் உழைப்பு, பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு, ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.

அடுத்த படத்திலாவது சிரிக்க வைப்பாரா சிவகார்த்திகேயன்? என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்போம்!

சீமராஜா ரேட்டிங் – 2.5/5.

More News >>