எட்டு வழிச்சாலை பணிகள் நிறுத்தம்... மத்திய அரசு உறுதி

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்குகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதை படித்து பார்த்த நீதிபதிகள் பல்வேறு முரண்பாடு இருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்.

குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதனை ஏற்ற நீதிபதிகள், பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக 109 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார்.

கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 பேர் கைதாகி ஜாமினில் வெளியே வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் இருவரின் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், 5 பேரின் குற்றப்பின்னணி குறித்த அரூர் துணை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

More News >>