நாளை ஆசிய கோப்பை - ஹிட்மேன் தலைமையில் சாதிக்குமா இந்தியா!
14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, துபாயில் நாளை துவங்குகிறது. இந்த போட்டியில், கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ரோகித் ஷர்மா தலைமையில், தோனியின் வழிகாட்டுதலோடு ஆசிய கோப்பையை இந்திய அணி எதிர்கொள்வது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
நாளை (செப்.,15) தொடங்கும் இந்த ஆசிய கோப்பை வரும் செப்.,26ம் தேதி நிறைவடைகிறது. இதில், ஐசிசி.,யின் முழுநேர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கனிஸ்தான் மற்றும், வங்கதேசம் அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.
ஆறாவது அணியாக, ஹாங்காங் அணி தகுதி சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் தேர்வாகியுள்ளது.
ஹிட்மேன் தலைமை:
இங்கிலாந்து தொடரில், டி20 தொடரை கைப்பற்றிய கோஹ்லி தலைமையிலான அணி, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி தொடரை மிக மோசமாக பறிகொடுத்தது.
இந்நிலையில், கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ’ஹிட்மேன்’ ரோகித் ஷர்மா தலைமையில் களமிறங்குகிறது.
இந்தியா – பாகிஸ்தான்:
இத்தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் உள்ள உலக தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர், ஆல்ரவுண்டர் ஹசன் அலி, சமீபத்தில், டபுள் செஞ்சுரி அடித்து மெர்சல் காட்டிய துவக்க வீரர் பஹர் ஜமான் உள்ளிட்டோர், இந்திய அணிக்கு கடும் சவாலாக விளங்குவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
மற்ற அணிகள்:
பாகிஸ்தானை, தொடர்ந்து, பலம் வாய்ந்த அணியாக இலங்கை மற்றும் வங்கதேசம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. மேலும், அறிமுக அணியான ஹாங்காங் என்ன செய்யவுள்ளது என்பது ரசிகர்களின் ஆர்வமாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து தொடரில் பலத்த அடி வாங்கிய இந்திய அணி, ஆசிய கோப்பையை வென்று ரசிகர்களின் மன சிம்மாசனத்தை மீண்டும் பிடிக்க வாழ்த்துகள்!