ப.சிதம்பரம் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு நீட்டிப்பு

வெளிநாட்டு சொத்துகளை மறைத்த வழக்கில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்ததை அக்டோபர் மாதம் 12ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் குடும்பத்தினர் இங்கிலாந்தில் ரூ.5.37 கோடிக்கும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடிக்கும் சொத்துகள் வாங்கியதை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறையினர் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம், அவரது மனைவி, மகன், மருமகள் மீது வருமான வரித்துறையினர் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும், விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் செப்டம்ப் 14ம் தேதி வரை நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டது. இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விலக்கு அளித்ததை நீட்டிக்கும்படி மீண்டும் ப.சிதம்பரம் குடும்பத்தினர் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரம் மற்றும் குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்ததை வரும் அக்டோபர் மாதம் 12ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

More News >>