தமிழக பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.