சென்னையில் அதிர்ச்சி: வறுமையில் தவித்ததால் மகனை கொலை செய்த தாய்
By Rajkumar
சென்னை ஆலந்தூர் அருகே போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்ததால் கண்பார்வையற்ற மகனை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த அவலம் அரங்கேறி உள்ளது.
சென்னை ஆலந்தூர் பட்ரேடு நஸ்ரத் புரத்தை சேர்ந்தவர் பத்மா. கணவரை பிரிந்து வாழ்ந்த இவருக்கு 13 வயது கண்பார்வையற்ற மகன் பரத் இருந்தார். போதிய வருமானமின்றியும், மகனை வளர்க்க வழி தெரியாமலும், இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தனது மகன் பரத்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பத்மா. ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தோமையார் மலை போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கணவரை பிரிந்து பத்து வருடங்களாக கண்பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு வருமானம் இல்லாமல் வாழ வழி தெரியாமல் அவதிப்பட்டு வந்த தன் மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடைசி நேரத்தில் மனம் மாறி மகனை காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதும் அதிர்ச்சி அடைந்ததாக தாய் பத்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.