விருதுநகர்nbspமாவட்டத்தில் மழைக்கு இருவர் பலி
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நேற்று இரவு மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
ராஜபாளையத்தில், சாலைகளில் கழிவு நீர் அதிகமாக சென்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். ஏழாயிரம் பண்ணை அருகே ஜெகவீரன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை சுற்றுப் புறச் சுவர் இடிந்து விழுந்ததில் காவலாளி காளியப்பன் உயிரிழந்தார். வெம்பக்கோட்டை அருகே சோலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குருவம்மாள் என்பவர் தனது தோட்டத்தில் இருந்து வீடு திரும்பும் போது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம், செவிலிமேடு, வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரம் தொடர் மழை பெய்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில், பலத்த இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது.