ஆசிய கோப்பை: இலங்கையை பந்தாடியது பங்களாதேஷ்!

துபாயில் இன்று தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில், 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று தொடங்குகியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன.

முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து, பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் லிடன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.

ஆட்டத்தின் முதல் ஓவரின் 5-ம் பந்தில் லிடன் தாஸ் ஆட்டமிழந்து வெளியேற, கடைசி பந்தில் சகிப் அல் அசன் போல்டு ஆகி ஆட்டமிழந்தார். பின்னர் லக்மல் வீசிய இரண்டாவது ஓவர் கடைசி பந்து தமிம் இக்பாலின் இடது கையை பதம் பார்த்தது. இதனால் வலியில் துடித்த தமிம் இக்பால் (2) ரன்களோடு ரிட்டையர்டு ஹர்ட் முறையில் ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பிவிட்டார்

இதனை தொடர்ந்து விளையாடிய அந்த அணியில் மிதுன் (63), மகமுதுல்லா (1), உசைன் (1), மிராஜ் (15), மோர்தாசா (11), ருபேல் (2), ரஹ்மான் (10) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அந்த அணியின் ரஹீம் 144 (11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) என அடித்து விளையாடி ரன்களை குவித்து ஆட்டமிழந்துள்ளார். அவருடன் விளையாடிய தமிம் இக்பால் (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது.

262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் ஆட்டக்காரர்கள் பங்களாதேஷ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

உபுல் தரங்கா (27), குஷல் மெண்டில் (0), குஷல் பெரேரா (11), தனஞ்செயா டி சில்வா (0), ஏஞ்சலோ மேத்யூஸ் (16), தசுன் ஷனகா (7), திஷர பெரெரா(6), திருவன் பெரேரா (29), சுரங்கா லக்மால் (20), அமிலா அப்போன்சா (4), லசித் மலிங்கா (3- நாட் அவுட்) என அனைத்து வீரர்கள் மிகவும் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க, 35.2 ஓவர்களில் இலங்கை அணி 124 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதன்மூலம், பங்களாதேஷ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

சிறந்த ஆட்ட நாயகன் விருது 150 பந்துகளில் 144 ரன்கள் விளாசிய முஷ்ஃபிகுர் ரஹீமுக்கு வழங்கப்பட்டது.

More News >>