ஒரே மேடையில் 120க்கும் மேற்பட்ட தம்பதிகளின் கோலாகலமான மணவிழா
By Rajkumar
சேலம் மாவட்டம் பேளூர் பகுதியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் திருமண விழா செப்டம்பர் 12, 2018 புதன்கிழமை அன்று 120க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றது.
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் சுயம்பு லிங்கம் கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆண்டுதோறும் சித்திரை 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது சிறப்புக்குரியது.
சக்தி அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் ஈசனின் சன்னதிக்கு இடதுபுறம் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார். மா, பலா, இலுப்பை மூன்றும் இணைந்த அதிசய மரம் இங்கு தல விருட்சமாக இருக்கிறது. இக்கோயிலில் பிற்பகுதியான மேற்கு பகுதியில் வசிஷ்ட நதி அமைந்துள்ளது.
இந்த ஆலயம் 97 அடி உயர ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோவிலின் முன்பகுதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில், யாழி மற்றும் குதிரைவீரன் சிற்பங்கள் கலை நுணுக்கத்துடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சிணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, பிச்சாடனர், காலபைரவர் போன்ற சன்னிதிகளும் உள்ளன. வன்னி மரத்தடியில் நவக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. சனீஸ்வரர் காகம் வாகனத்தில் ஒற்றைக்காலுடன் நின்றபடி காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பெளர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த புதன்கிழமை செப்டம்பர் 12, 2018 அன்று காலை 3 மணி முதல் 9 மணி வரை தான்தோன்றீஸ்வரர் முன்னிலையில், 120க்கும் மேற்பட்ட தம்பதிகளின் திருமணங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், கோயிலின் நுழைவாயிலில் இருந்து தம்பதிகள் அனைவரும் சன்னதி அருகே செல்வதற்கு வெகு நேரம் ஆயிற்று. திருமணத் தம்பதிகள் அனைவரும் கோயிலில் திருமணப் பதிவு செய்வதற்கு வரிசைகட்டி கால்கடுக்க நின்றனர்.