பிள்ளையாரை கரைக்க சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பலி
பவானி ஆற்றில் பிள்ளையாரை கரைக்க சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதூர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பூஜைகள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், பிள்ளையார் சிலைகளை கரைக்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கியது.
மூன்றாம் நாளான நேற்று முதல் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் மும்மூர்த்தி நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் சிலையை எடுத்து வந்தனர். அப்போது, சிலையை ஆற்றில் கரைக்கும்போது யாரும் எதிர்பாராத நேரத்தில், மூன்று இளைஞர்கள் ஆற்றில் விழுந்தனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் ஆற்றில் குதித்து இளைஞர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், ஒரு இளைஞர் மட்டுமே மீட்கப்பட்டார். மீதம் இருந்த இருவரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.