சென்னையில் நள்ளிரவில் நீடித்த மழை...
சென்னை மற்றும் சுற்று வாட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் மழை பெய்யும் என்று கடந்த சில நாட்களாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. ஆனால், அதற்கு மாறாக வெயிலின் தாக்கமே அதிகமாக இருந்து வருகிறது. சென்னையில் சொல்லவே வேண்டாம். மே மாத வெயிலைப் போல் மக்களை வதைத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. குறிப்பாக, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது.
குறிப்பாக, எழும்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
இதனால் ஏற்பட்ட குளிர்ச்சியான சூழல், சென்னை மக்களை உற்சாகமடைய வைத்துள்ளது.