நிதி பயன்பாட்டில் முறையான விதிமுறைகள் தேவை: ஸ்ரீதர் ஆச்சர்யலு வலியுறுத்தல்
By Rajkumar
நாடாளுமன்றம் உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவது தொடர்பாக சட்ட விதிமுறைகளை வகுக்குமாறு மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஆகியோருக்கு தகவல் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.
மத்திய திட்ட அமலாக்க அமைச்சகத்திடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு சமூக ஆர்வலர்கள் மனு அளித்திருந்தனர். அவற்றில், எம்.பி களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து தொகுதி வாரியாக, எம்.பிக்கள் வாரியாக, திட்டப்பணிகள் வாரியாக விவரங்களை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்கள் கோரியிருந்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும், ஒட்டுமொத்தமாக செலவிடப்பட்ட தொகை பற்றிய விவரங்களை மட்டுமே உள்ளது என்றும், மத்திய திட்ட அமலாக்கம் பதிலளித்தது. எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 12,000 கோடி ரூபாய் செலவிடப்படவே இல்லை என்றும் அமைச்சகம் பதிலளித்திருந்தது.
அதுமட்டுமின்றி நிதி செலவினம் குறித்த தொகுதி வாரியான விபரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ளது என்றும், அந்த அமைச்சகம் தெரிவித்தது. இந்த விவகாரம் தகவல் ஆணையத்திற்கு சென்றடைந்ததையடுத்து மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர் அலுவலகங்களுக்கு மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், எம்.பிக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 5 கோடி ரூபாய் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை கண்காணிக்க முறையான விதிமுறைகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நிதி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க சில விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பயன்படுத்தப்பட்ட நிதிக்கு முறையான வரவு செலவு கணக்குகளை எம்.பிக்கள் தாக்கல் செய்யுமாறு சட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.