எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு
நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் அவதூறாகப் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் சனிக்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரை அவதூறாகப் பேசியதாக வீடியோ வெளியானது.
இந்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து, எச்.ராஜாவின் பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் எச்.ராஜா மீது திருமயம் காவல் ஆய்வாளர் ஏ.மனோகரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினருடன் தகராறுசெய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட 18 பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 143, 188, 153 (ஏ), 290, 294 பி, 353, 505 (1), 506 (1) ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக, திருமயம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து எச்.ராஜா, “நான் நீதிமன்றத்தை மதிப்பவன், அந்த வீடியோவில் நான் பேசுவதை யாரோ எடிட் செய்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.