68வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து
இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் உள்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு எளிமையாக தனது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ள பிரதமர் மோடி வாரணாசிக்கு சென்று பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாட இருக்கிறார்.
இதன் பிறகு, காசி விஸ்வநாதன் கோவிலில் தரிசனம் செய்த பிறகு, பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக வாரணாசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் நாட்டிற்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புமிக்க சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து, மோடி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திப்பதாக நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இவர்களை தவிர, காங்கிரஸ் கட்சி தலைவர்கள், பொது மக்கள் என பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். இதனால், மோடியின் பிறந்தநாள் வாழ்த்துகள் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.