பெரியார் சிலை மீது காலணி வீச்சு... சென்னையில் பரபரப்பு
சென்னையில் பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியார் பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து வருகின்றர். இந்நிலையில், காலை 10 மணி அளவில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், பெரியார் சிலை மீது, காலணியை வீசினார்.
உடனே, அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அந்த இளைஞரை தாக்கினர். உடனே, அங்கிருந்த போலீசார், அவரை மீட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது, போலீஸ் வாகனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறித்ததோடு, அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பெரியார் சிலையின் தலை மீது மர்ம நபர்களை காலணியை வைத்துவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிலையின் தலை மீது இருந்த காலணியை அகற்றியதோடு, அநாகரீகமான செயலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.