எச்.ராஜாவுக்கு சீமான் கண்டனம்
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தையும், போலீசாரையும் ஆவேசமாக விமர்சித்து பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "எச்.ராஜா பேசிய வார்த்தைகளை நாங்களோ, பிற இயக்கங்களோ பயன்படுத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? சனநாயகப் பேராற்றல்களாக இருக்கிற ஊடகங்கள்தான் அதனை மக்களுக்குச் சொல்ல வேண்டும். பொதுவெளியில் தமிழினத்தின் பெரும் அறிஞராக இருக்கும் மதிப்புமிக்க வைரமுத்து அவர்களைப் பற்றியும், அவரது தாயார் பற்றியும் மிக இழிவாகப் பேசுகிறார்.
அதற்கு அவரது கட்சியின் தலைமையோ, ஆளுகிற அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைப் போலத் தற்போது காவல்துறையினரைப் பற்றியும், உயர் நீதிமன்றத்தைப் பற்றியும் மிக இழிவாகப் பேசுகிறார்.
அதிகாரத்திற்கு வந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையினைத்தான் இதுவெல்லாம் காட்டுகிறது. இதனைத்தான் அதிகாரத்திமிர் என்கிறோம். அப்படியானால், சட்டமும், திட்டமும் சாமானியர்களுக்கு மட்டும்தானா? அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் அப்பாவிகளுக்கு மட்டும்தானா? என்கிற கேள்வியைத்தான் இதுவெல்லாம் எழுப்புகிறது.
அதிகாரத்தின் உயரத்தில் இருப்பவர்களுக்குச் சட்டம் கைகட்டி நிற்கும் என்றால் எப்படிச் சனநாயக ஆட்சிமுறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்? சட்டம் அடிபணிந்து நிற்குமானால் பாரபட்சமின்றி மக்களுக்குச் சமநீதியை வழங்கும் என்று எவ்வாறு நம்ப முடியும்?
எச்.ராஜா, தான் வகிக்கிற பொறுப்பு, தனது வயது போன்றவற்றிற்காகவாவது பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து வாய்க்கு வந்தபடி தான்தோன்றித்தனமாகப் பேசுவது அழகல்ல!" எனக் குறிப்பிட்டுள்ளார்.