பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- குமாரசாமி அறிவிப்பு
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
தினசரி விலை நிர்ணய முறையால், நாட்டில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டேருக்கிறது. இதனால் சரக்கு ஏற்றி வரும் அனைத்துவிதமான போக்குவரத்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை எளிய, நடுத்தர வர்க்க மக்களுக்கு கூடுதல் சுமையாக இருப்பதால், விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஏற்ற ஆந்திரா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது.
அந்த வரிசையில், கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி, பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
கல்புர்கி மாவட்டத்தில் பேசிய அவர், "மாநிலத்தின் கூடுதல் வரியை குறைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் பெட்ரோல் டீசல் விலை இரண்டு ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் அவதிப்பட்டு வந்த மக்கள் சற்று மகிழ்ச்சியை தரும்" எனக் கூறினார்.