மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா...

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்து மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான இன்று மலையப்ப சுவாமி, மோகினி அலங்காரத்தில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, தங்க கிளி, பட்டுச்சேலையை அணிந்து நான்கு மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன் ஸ்ரீகிருஷ்ணர் பல்லக்கும் உலா வந்தது.

மந்திர பருவத மலையை தேவர்களும், அசுரர்களும் பார்கடலில் கடைந்த போது வந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்குவதற்காக மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். அசுரர்களை மயங்க வைத்து விட்டு தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கினார். இதை விளக்கும் வகையில் மோகினி உற்சவம் நடக்கிறது.

இந்த வீதிஉலாவில் யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வர அன்னமைய்யா சங்கீதங்கள்,பஜனை பாடல்கள் கோலாட்டம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியபடி வீதிஉலாவில் பங்கேற்றனர்.இதனை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் அமர்ந்து கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசித்தனர்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருட சேவை உற்சவம் இன்றிரவு 8 மணியளவில் நடைபெறுகிறது. தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மகாவிஷ்ணு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

More News >>