கர்ப்பிணியை தூக்கிச் சென்ற காவலர்
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் நகரில் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக காவல் அதிகாரி ஒருவர் கைகளில் தூக்கிச் சென்றுள்ளார்.
பல்லப்ஹார் என்ற ஊரை சேர்ந்த மகேஷ், நிறைமாத கர்ப்பிணியான தம் மனைவி பாவானாவை மதுரா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார். ஹாத்ராஸ் ரயில் நிலையத்தில் அவர்கள் இருந்தபோது, பாவனாவுக்கு பிரசவ பலி ஏற்பட்டுள்ளது. பாவனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி கிடைக்காமல் மகேஷ் தவித்துள்ளார். பாவனாவின் கதறலைக் கேட்டு மக்கள் கூடியுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த ஹாத்ராஸ் நகர காவல் அதிகாரி சோனு குமார், மக்கள் கூடியிருந்ததை பார்த்து விசாரித்துள்ளார். பாவனாவின் நிலையை அறிந்த அவர், ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். வெகு நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வந்து சேராததால், ரிக் ஷாவில் பாவனாவை ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பிரசவ வேதனையில் பாவனா துடித்துக்கொண்டிருந்த நிலையில், ரிக் ஷாவிலிருந்து அவரை இறக்கி மருத்துவமனைக்குள் கொண்டு செல்வதற்கு ஸ்ட்ரெக்சர் கேட்டுள்ளார் சோனு குமார். ஆனால், மருத்துவமனையில் ஸ்ட்ரெக்சர் கிடைக்கவில்லை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த காவல் அதிகாரி சோனு குமார், பாவனாவை தம் கரங்களில் ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்று அனுமதித்துள்ளார். அங்கு பாவனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 14ம் தேதி நடந்த இந்த சம்பவம், காக்கிக்குள் உள்ள கடமையுணர்வை காட்டியுள்ளது. அதிகாரி சோனு குமாருக்கு மகேஷ் - பாவனா தம்பதியர் நன்றி தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் உதவி செய்து தாயையும் மகவையும் காப்பாற்றிய காவல் அதிகாரி சோனு குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.