திருமுருகன் காந்தி மீதான உபா வழக்கு ரத்து
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான உபா வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பேசினார். நார்வேயிலிருந்து கடந்த 9ஆம் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில், ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்து விட்டார். இதையடுத்து, தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், 2017 ல் நடந்த ஒரு கூட்டத்தில், பாலஸ்தீனத்தில் நடந்த போராட்டம் போல தமிழகத்திலும் விரைவில் நடக்கும் எனப் பேசியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த பிரிவின் கீழும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, இந்த வழக்கு விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தேதியில் தான் சிறையில் இருந்ததாக திருமுருகன் காந்தி தெரிவித்தார். அதற்கு, தட்டச்சு பிழை என அரசுத்தரப்பு தெரிவித்தது.
இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டப் பிரிவு (உபா) எப்படி பொருந்தும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, திருமுருகன் காந்திக்கு எதிரான இந்த பிரிவை ரத்து செய்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த பிரிவின் கீழ் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டார்.