கல்லூரி விடுதியில் கஞ்சா பொட்டலங்கள் - மூவர் கைது

மதுரை அமெரிக்கன் கல்லூரி விடுதிகள் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் மாணவர்கள் 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை தபால்தந்தி நகரில் மாநகர காவல்துறை ஆணையரின் தலைமையில் செயல்படும் தனிப்படை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது, விலைமதிப்பு மிக்க இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அப்போது 4 கஞ்சா பொட்டலங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.    அதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர்கள் அமெரிக்கன் கல்லூரியில் படிப்பதாகவும், அங்கு விடுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வாங்கிச் செல்வதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.   அதனை அடிப்படையாகக் கொண்டு அந்த கல்லூரிக்கு சென்ற போலீஸார் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை செய்தனர். விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் அறைஎண் 47 மற்றும் 76 ல் இருந்து 30 க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.   இதையடுத்து, முதலில் பிடிபட்ட இருவர் மற்றும் விடுதியில் சிக்கிய ஒருவர் என மொத்தம் மூன்று மாணவர்களை தல்லாகுளம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.    செல்லூரில் இருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது மூன்று பேரை அழைத்துக்கொண்டு போலீசார் அங்கு சென்றுள்ளனர்.
More News >>