நான் மாடுகளைக் கூட தமிழில் பேசவைப்பேன்-நித்யானந்தா அதிரடி
சர்ச்சைக்கு பெயர் போனவர்தான் நித்யானந்தா. சில நாட்களாகவே இருந்த இடம் தெரியாமல் இருந்த இவர். இப்பொழுது மாடு போன்ற உயிரினங்களை பேச வைக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்கக்கூடிய மென்பொருளை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.
நித்யானந்தா கூறுகையில், மனிதர்களுக்கும் குரங்குகள் உள்ளிட்ட விலங்கினங்களுக்கும் உள்ளுறுப்புகளில் ஒரு சில வேறுபாடுகள் உள்ளது. இதை சமன்படுத்தி குரல்வளத்துக்கு காரணமான ‘வோக்கல் கார்ட்’ எனக் கூறப்படும் தொண்டையின் உள்பகுதியை சரிசெய்து விட்டால் சிங்கம், புலி ஆகியவற்றை கூட பேச வைக்கலாம் என்பதை நான் ஆராய்ச்சி மூலம் அறிந்து கொண்டேன்.சிறப்பு உணர்வு அதிர்வலைகளை விலங்கினங்களின் மூளை பகுதிகளுக்குள் செலுத்துவதன் வாயிலாக இந்த உறுப்புகளை அவற்றுக்குள் உருவாக்கி, குரங்கு உள்ளிட்டவற்றை எளிதாக பேச வைக்க முடியும் என்பதை அறிவியல்பூர்வமாக, மருத்துவரீதியிலான ஆராய்ச்சியின் மூலம் நான் கண்டறிந்து கொண்டேன்.இதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் சோதனையில் வெற்றி அடைந்துள்ளதை உறுதிப்படுத்தி கொண்ட பின்னர்தான் இதை நான் வெளிப்படையாக தெரிவிக்கின்றேன். நீங்கள் வேண்டுமானால் எழுதி வைத்து கொள்ளுங்கள். இதை பயன்படுத்தி இன்னும் ஓராண்டுக்குள் குரங்குகளை நான் பேசவைத்து காட்டுகிறேன்.இதை மேம்படுத்திய பின்னர் மாடுகளும், காளைகளும் தெள்ளத்தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் உங்களிடம் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பேசப்போவதை நீங்கள் கேட்கத்தான் போகிறீர்கள் என்றும் சீடர்களின் பலத்த கரவொலிக்கு இடையில் நித்யானந்தா கூறி அசத்தியுள்ளார்.