செக்கச்சிவந்த வானம் படத்திற்கு U/A சான்றிதழ்!
மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிக, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா, பிரகாஷ் ராஜ் மற்றும் தியாகராஜன் என திறமையான நடிகர்கள் பட்டாளமே இணைந்துள்ள செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை நேற்று தணிக்கைக் குழு வழங்கியுள்ளது.
முற்றிலும், ரத்தம் தெறிக்க தெறிக்க துப்பாக்கி சண்டைகளும், சண்டைக் காட்சிகளும் நிறைந்த செக்கச்சிவந்த வானம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் எப்படி கிடைத்தது என்பது படம் வெளியாகியவுடன் தான் தெரியவரும்.
படத்தின் டிரெய்லர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் வெளியான பாடல்கள் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. வரும் செப்.27ம் தேதி அறிவித்தபடி படம் ரிலீசாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
ராவணன், கடல், ஓ.கே.கண்மணி, காற்று வெளியிடை என தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்த மணிரத்னம், செக்கச்சிவந்த வானம் படம் மூலம் பிளாக்பஸ்டரை கொடுப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.
படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களையும், தினமும் போஸ்டர்கள் மூலம் அறிமுகப்படுத்திய படக்குழு, தற்போது, ஒவ்வொரு கேரக்டர்களின் மேக்கிங் விடியோவையும் தினமும் வெளியிட்டு வருகிறது.
மேலும், இன்று மாலை 6 மணிக்கு டிரெய்லரில் வெளியான “நீ வந்து சென்றனை.. எனை கண்டு சென்றனை.. உயிர் வென்று சென்றனை..” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற ”கள்ள களவாணி” முழுப் பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.