அன்பான இயக்குநருக்கு ஹாப்பி பர்த்டே!
தமிழ் சினிமாவின் அன்பான இயக்குநர் என்ற பெயர் எடுத்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
குறும்பட இயக்குநரான விக்னேஷ் சிவன், 2012ம் ஆண்டு சிம்பு – வரலட்சுமியை வைத்து 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷின் வேலை இல்லா பட்டதாரி படத்தில் இன்ஜினியராக கேமியோ ரோலில் நடித்தார்.
காதல் தந்த வாழ்க்கை:
போடா போடி படம் ஃபிளாப் ஆன நிலையில், நடிகை நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனுக்கு காதல் மலர்ந்தது. அதனை தொடர்ந்து 2015ம் ஆண்டில் விஜய்சேதுபதி – நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய "நானும் ரவுடிதான் படம்" பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றி மூலம் முன்னணி இயக்குநராக வலம் வரத் தொடங்கினார் விக்னேஷ் சிவன்.
சூர்யா தந்த வாய்ப்பு:
சிங்கம் - 3 படம் சரிவர போகாததால், அடுத்து கன்ஃபார்ம் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட சூர்யா, நானும் ரவுடிதான் படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு, விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பளித்தார். ஆனால், அந்த வாய்ப்பை பாதி மட்டுமே பூர்த்தி செய்தார் விக்னேஷ் சிவன்.
வெற்றியை பெற வேண்டும் என நினைத்து, அக்ஷய் குமார் நடிப்பில், பாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்த 'ஸ்பெஷல் 26' படத்தை ரீமேக் செய்தனர். ஆனால், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படம் மற்ற படங்களை விட நன்றாக இருந்த போதும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் சுமாரான படம் ஆக மாறியது.
பாடலாசிரியர் விக்னேஷ் சிவன்:
இயக்குநரான விக்னேஷ் சிவன் பாடலாசிரியராகவும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். அனிருத் இசையில், "வணக்கம் சென்னை", "நானும் ரவுடிதான்", "ரெமோ", "தானா சேர்ந்த கூட்டம்", "கோலமாவு கோகிலா" படங்களுக்கு பாடல் எழுதினார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில், அச்சம் என்பது மடமையடா படத்தின் "சோகாளி" பாடல் இவர் எழுதியதே!
எப்போ சார் கல்யாணம்:
விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் புரிந்து வருவது திரையுலகம் அறிந்த ஒன்றே. பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஞாயிறன்று அம்ரித்சரசில் உள்ள பொற்கோவிலுக்கு இருவரும் சுற்றுலா சென்று வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நயன் – விக்கி கல்யாணம் எப்போ சார் நடக்கும் என்பதே கோலிவுட்டின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!