ஆசிய கோப்பை: ஹாங்காங்கிற்கு 286 ரன்கள் இலக்கு!
ஆசிய கோப்பை லீக் தொடரில், ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 285 ரன்கள் குவித்துள்ளது.
துபாயின் சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய கோப்பை லீக் தொடரில் இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஹாங்காங் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது.
கேப்டன் ரோகித் சொதப்பல்:
விராத் கோலிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரோகித் ஷர்மா, எளிய அணியான ஹாங்காங்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். 22 பந்துகளுக்கு வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்து இஷான் கான் பந்துவீச்சில் நிஜாகத் கானுக்கு ஈஸி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தர்ம அடி கொடுத்த தவான்!
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், ஹாங்காங் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் தெறிக்க விட்டு சதம் விளாசி, இந்திய அணியின் ஸ்கோர் உயர காரணமாக அமைந்தார். 120 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 15 பவுண்டரிகள் விளாசி 127 ரன்கள் குவித்தார். பின்னர், கே.டி ஷாவின் பந்துவீச்சில், தூக்கி அடிக்க பார்த்து, ஷாட் மிஸ் ஆனதன் காரணத்தால், தன்வீர் அப்சலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஆறுதல் கொடுத்த அம்பத்தி ராயுடு:
ஷிகர் தவானுடன் கைகோர்த்த அம்பத்தி ராயுடு, 70 பந்துகளில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் விளாசி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டக் அவுட் ஆன தோனி:
பெரிதும் எதிர்பார்த்த இந்திய வீரர் தோனி, 3 பந்துகளில் கே.டி. ஷாவின் பந்துவீச்சில், டிப் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால், 300 ரன்களுக்கு மேல் எகிறும் என எதிர்பார்த்த இந்திய ஸ்கோர் 285 ரன்களுக்குள் சுருண்டது.
கின்சித் ஷா அசத்தல்:
அறிமுக அணியான ஹாங்காங்கின் ஆல்-ரவுண்டரான கின்சித் ஷா, தனது ரைட் – ஆர்ம் ஆஃப் பிரேக் பந்து வீச்சினால், 9 ஓவர்களில் வெறும் 39 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் ரன் வேகத்தை தடுத்தார். இஷான் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இஷான் நவாஸ், அசிஸ் கான் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து ஹாங்காங் அணி சமாளிக்குமா? என ஹாங்காங் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.