பரோடா, விஜயா, தேனா வங்கிகள் இணைகின்றன
கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரத மகிளா வங்கி இணைக்கப்பட்டது போல பரோடா வங்கி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை இணைப்பதற்கு நடுவண் அரசு முயற்சி செய்கிறது.
நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையில் அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் அடங்கிய குழு இந்த முடிவை முன்வைத்துள்ளது. இணைக்கப்படும் பட்சத்தில் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இது திகழும்.
இந்த மூன்று வங்கிகளுள் பரோடா வங்கி 10.29 லட்சம் கோடி வர்த்தகம் செய்யும் பெரிய வங்கியாகும். விஜயா வங்கி 2.79 லட்சம் கோடியும், தேனா வங்கி 1.72 லட்சம் கோடியும் வர்த்தகம் செய்கின்றன. இவை இணைந்த அமைப்பு குறைந்த வைப்புத் தொகை பிரிவில் நாட்டின் 34 சதவீதத்தையும் மொத்த வங்கி வர்த்தகத்தில் 12 சதவீதமாகிய 14.82 லட்சம் கோடி வர்த்தகத்தையும் கொண்டிருக்கும்.
"வங்கி இணைப்பின் மூலம் வங்கி செயல்பாடு அதிகரிக்கும். விரிவடையும் வாய்ப்பு பெருகும். ஆகவே யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த மூன்று வங்கிகளின் இயக்குநர் குழுக்கள் இது பற்றி விவாதித்து இறுதி முடிவு எட்டப்படும்," என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
"இணைப்பின்போது ஊழியர்களின் நலன் காக்கப்படும். இணையும் வங்கிகளின் பங்கு மதிப்பு பாதுகாக்கப்படும். புதிய அமைப்புக்கு அரசு தொடர்ந்து முதலீடு மூலம் ஆதரவு தரும். வங்கியின் செயல்திறனும் வாடிக்கையாளர் சேவை தரமும் உயரும். இந்த இணைப்புக்கான திட்டம் உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் வைக்கப்படும்," என்று மத்திய நிதி சேவை செயலர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.