பிரதமரின் பிறந்தநாள் - கேக் வெட்டி கின்னஸ் முயற்சி

கடந்த திங்கள்கிழமை பாரத பிரதமர் நரேந்திர மோடி தமது 68வது பிறந்தநாளை கொண்டாடினார். அதே நாள் (செப்டம்பர் 17) பிறந்த 1,200 பேர் ஒன்றாக கூடி பிறந்தநாளை கொண்டாடும் விழா குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்தது.

குஜராத்தை சேர்ந்த 'அதுல் பேக்கரி' என்னும் நிறுவனம், ஒரே நாள் பிறந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இணைந்து கொண்டாடும் பிறந்தநாள் விழாவாக இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று இம்முயற்சியில் ஈடுபட்டது.

செப்டம்பர் 17ம் தேதி பிறந்தவர்கள் அநேகர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அழைத்து வரப்பட்டிருந்தனர். 50 பேர் கொண்ட 20க்கும் மேற்பட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டன. குழந்தைகள் முதல் முதியோர் வரை பல்வேறு குழுக்களாக பிறந்தநாளுக்கான விசேஷ தொப்பி அணிந்து கேக் வெட்டினர். ஒவ்வொரு குழுவுக்கும் மோடி கொண்டு வந்த நல திட்டங்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன.

2012ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி, நெதர்லாந்தில் ஒரே நாள் பிறந்தநாளைக் கொண்ட 228 பேர் கூடி கொண்டாடியதே பெரிய நிகழ்ச்சியாக இருந்தது. சூரத்தில் சர்சேனா பொருட்காட்சி அரங்கில் நடந்த 'அதுல்ய சக்தி டிவாஸ்' விழாவில் செப்டம்பர் 17 அன்று பிறந்த 1,200 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இதே பேக்கரி 680 அடி பிரமாண்டமான கேக்கை செய்து அதை மாற்றுத் திறனாளிகளை கொண்டு வெட்டி பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

More News >>