ராகுல் மற்றும் அவரின் தாயார் சோனியாவின் சதி.. சுப்பிரமணியன் சாமி
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்., தலைவர் ராகுல் மற்றும் அவரின் தாயார் சோனியா இருவரும் பல்வேறு சதி, மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக பா.ஜ.கா, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து தான் தொடர்ந்த வழக்கில், டில்லி கோர்ட்டில் நீதிபதி சமர் விஷால் முன்பு ஆஜராகிய சுப்பிரமணியன் சாமி அளித்த வாக்குமூலம்: யங் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் ராகுலுக்கும், சோனியாவுக்கும் சொந்தமாக உள்ளது. அந்நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் அவர்களிடமே உள்ளன.
இதனை பயன்படுத்தி அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முறைகேடாக இருவரும் அபகரித்துள்ளனர். இதற்காக இருவரும் பல்வேறு சதி, மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 1938-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கப்பட்டது. அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் "நேஷனல் ஹெரால்டு" என்ற ஆங்கிலப் பத்திரிகையும், "குவாமி ஆவாஸ்" என்ற உருது பத்திரிக்கையும், "நவ ஜீவன்" என்ற பத்திரிகையும் வெளிவந்தது. கடும் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பத்திரிகை களை வெளியிடுவது கடந்த 2008-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.