ஆமை புகுந்த வீடும், அரசாங்கம் புகுந்த கோவிலும்.. மீண்டும் சர்ச்சையில் எச்.ராஜா
வேடசந்தூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், பா.ஜ.க., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அதில் பேசிய எச்.ராஜா கூறுகையில்,' மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் புரட்சி அல்ல. சேலை கட்டிய பெண்களுக்கு அனுமதி இல்லை. தவிர, மது, மாது, மாட்டுக்கறி ஆறாக ஒடியது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், உள்ளே செல்ல முடிந்ததற்கு பனியனும் ஜீன்ஸீம் அணிந்திருந்தது தான் காரணம் ' என்றார்.
இதற்கிடையில் பொதுக்கூட்டத்தில் எச். ராஜா பங்கேற்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டில் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, திருவண்ணாமலையில் இடும்பன் கோவில் காணாமல் போய் விட்டதாக சட்டமன்றத்தில் பேசினேன். அப்போதைய முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா. அதன்பிறகு விசாரித்துவிட்டு கோவில் காணாமல் போய் இருந்ததை அறிந்து ஆக்கிரமிப்பை அகற்றி கோவில் கட்ட உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவரது உத்தரவு செயல்பாட்டுக்கு வரவில்லை.
வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிற துர்கா பூஜையை போல, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய அளவில், 4 சக்திகள் ஒருங்கிணைந்து இந்து ஒற்றுமைக்கு மாறாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக இடதுசாரிகள், பிரிவினைவாதிகள், நக்சல்கள் உள்ளிட்டோர் இணைந்து செயல்படுகின்றனர். தூத்துக்குடியில் நடந்த கலவரத்துக்கு இதுபோன்ற அமைப்புகள்தான் காரணம். இதேபோல் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற விடாமல் இந்த அமைப்பினர் மக்களை தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் 5 சதவீத கோவில்கள் வணிக நிறுவனங்களாக உள்ளன. தமிழகத்தில் சிலர் இந்துக்களுக்கு எதிரான கருத்தையே பரப்பி வருகின்றனர்.
அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் போன்ற இடங்களில் விலை மதிப்புமிக்க தமிழக கோவில்களின் சிலைகள் உள்ளன. ஆனால் அந்த சிலைகளை அரசால் மீட்க முடியவில்லை. இதுபற்றி கேட்டால், எந்த கோவில் சிலை என தெரியவில்லை என்கின்றனர். இது ஆமை புகுந்த வீடும், அரசாங்கம் புகுந்த கோவிலும் விளங்கியதாக சரித்திரம் இல்லை என்ற பழமொழி சொல்வதை போல உள்ளது. இதேபோல் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பிற மதத்தினருக்கு வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கு ஒதுக்கி கொடுத்துள்ளனர். எனவே நாம் அனைவரும் மத மாற்றத்தை தடுத்து நிறுத்தி, ஒன்றுபட்ட உணர்வு சக்தியாக, இந்து சக்தியாக திகழ வேண்டும் என்று பேசியுள்ளார்.
அவர் மீது ஏற்கனவே வழக்கு இருக்கும் நிலையில், அவர் மீண்டும் சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.