அமெரிக்கா, சீனா இடையே தீவிரமடையும் வர்த்தகப் போர்
அமெரிக்கா, சீனா இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் ஒட்டுமொத்த உலக வர்த்தகத்திலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
200 மில்லியன் டாலர் மதிப்புள்ள சீன இறக்குமதி பொருட்கள் மீது 10 விழுக்காடு கூடுதல் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று உத்தரவிட்டார். அதன்படி வரும் 24ஆம் தேதி முதல் மின்னணு பொருட்கள், கடலுணவுகள், விளக்குகள், ரசாயனங்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகளுக்கு வரி உயர்த்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு இறக்குமதி வரியை ஏற்றி வருவது உலக வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை திரவ எரிவாயு உள்ளிட்ட 60 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு சீனா 10% அளவிற்கு வரியை உயர்த்தி இருக்கிறது.
அமெரிக்கா அறிவித்துள்ள அதே நாளான செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் வரி விதிப்பு அமலாகும் என்று சீனா அறிவித்துள்ளது. சீனாவின் பதிலடியை அடுத்து அந்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 267 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.