ஹெல்மெட் கட்டாய சட்டம்... நீதிமன்றம் அதிருப்தி
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்றவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டை கட்டாயமாக்கக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில்"கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரை ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த வழக்கு பாதியாக குறைந்து உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை படித்த பார்த்த நீதிபதிகள், ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்துவதில் பின்னடைவு இருப்பதாகவும், அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என பிறப்பித்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது என்றும் குறிப்பிட்டனர்.