வீட்டிலேயே கருக்கலைப்பு... கர்ப்பிணி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வீட்டிலேயே 7 மாத கருவை கலைக்க முயன்றபோது, கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் செவிலியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரம் கிராமத்தை சேர்ந்த, ராமன் - ராமுத்தாய் தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் ராமுத்தாய் கர்ப்பமான நிலையில், வயிறு பெரியதாக இருந்ததால், இந்த முறையும் பெண் குழந்தையே பிறக்கும் என எண்ணி வருந்தியுள்ளார்.
இதனால் கருவைகலைத்துவிட நினைத்த ராமுத்தாய், வீட்டில் யாருக்கும் தகவல் கொடுக்காமல், உசிலம்பட்டியில் உள்ள மருத்துவமனையை அனுகியுள்ளார். 7 மாதங்கள் ஆனதால், கருவை கலைக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அங்கிருந்த செவிலியர் லட்சுமி ராமுத்தாயை கூட்டிச்சென்று, கருவை கலைக்க முயன்றுள்ளார்.
அப்போது திடீரென, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ராமுத்தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், செவிலியர் லட்சுமி இதுபோன்று பல பெண்களுக்கு முறைகேடாக கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனவும் ராமுத்தாயின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து லட்சுமியை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை என பரிசோதனையில் தெரியவந்ததால், வீட்டிலேயே கருக்கலைக்க முயன்றது தெரியவந்துள்ளது.