வெட்கமாக இல்லையா? காவல்துறையை சீண்டிய எச். ராஜா..!
மீண்டும் மீண்டும் சர்சையில் சிக்கும் எச். ராஜா தற்போது நடு ரோட்டில் வைத்து காவல்துறையை கடுமையாக கொச்சைப்படுத்தியது எல்லை மிறிய செயல் ஆனாலும் எச். ராஜா மீது சட்டம் பாயாமல் போலீஸாரின் கைகளை தமிழக அரசு கட்டிப் போட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் கடும் ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
“வெட்கமாக இல்லையா, அசிங்கமாக இல்லையா, யூனிபார்மை கழற்றிப் போட்டுட்டுப் போங்க, லஞ்சம் வாங்கறீங்களே, நான் லஞ்சம் தர்றேன்” என்று மிக மிக கடுமையான வார்த்தைகளை அனல் கொட்டிப் பேசுகிறார் எச். ராஜா. எதிரில் நிற்கும் காவல்துறை அதிகாரிகள் அப்படி அமைதி காத்தது இன்னும் ஆச்சரியமாக உள்ளது. இது போன்ற பேச்சுக்களை காவல்துறையினரால் நிச்சயம் ஜீரணித்துக் கொள்ள முடியாது.
இந்த நிலையில் அதிமுகவிலேயே எச். ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு மேலும் இவரை சும்மா விடாது என்று அதிமுகவினரே கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களை அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், கோ அரி ஆகியோர் சந்தித்தனர். அப்போது இருவரும் எச். ராஜாவை கடுமையாக விமர்சித்தனர். இவரை நடமாடவே விடக் கூடாது என்று அருண்மொழி்த்தேவன் ஆவேசமாக பேசினார்.
கோ அரி பேசுகையில், “அவன் இவன் என்று பேசுகிறார். வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்”. இவர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நான் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து உரிமைப் பிரச்சினையை கொண்டு வரவுள்ளேன் என்றார்.
இன்று காவல்துறையின் நிலைமை எல்லா இடத்திலும் கெட்ட பெயர். தூத்துக்குடியாகட்டும், பாஜகவினரிடம் பம்மிப் போவதிலாகட்டும் காவல்துறையினர் கெட்ட பெயர்யை சம்பாதித்துள்ளனர். பொதுமக்களிடையே வரலாறு காணாத அவப்பெயரையும் காவல்துறையினர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
“எஸ்.வி.சேகர், எச். ராஜா போன்றோர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகின்றனர் ஆனால் அவர்களை நோக்கி காவல்துறையினரால் சுண்டு விரலைக் கூட நீட்ட முடியவில்லை ஏன் நிழலைக் கூட தொட முடியவில்லை.
ஆனால், மக்கள் சாதாரணமாக பேசினாலும் கடுமையான சட்டத்தில் கைது செய்து உள்ளே தூக்கிப் போடுகின்றனர். இது முரண்பாடாக உள்ளது, பெரும் ஆச்சரியமாக உள்ளது. காவல்துறையினரின் கைகள் அரசால் கட்டப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.” என்று பொதுமக்களிடையே பேசப்படுகின்றது.