இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழை நீடிக்குமா ? தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதன் பிறகு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், அந்தமான் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.இதேபோல், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு 19ம், 20ம் மற்றும் 21ம் தேதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வட தமிழகத்தில் அடுத்த இரண்டு நாளுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.