பாகுபலி பாணியில் பிரம்மாண்டமாக உருவாகும் ராதிகாவின் சந்திரகுமாரி சீரியல்!
‘வாணி ராணி’ சீரியலை அடுத்து ராதிகா சரத்குமார் ‘சந்திரகுமாரி’ என்ற சரித்திர சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை ராதிகா தற்போது ‘வாணி ராணி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் வாணி மற்றும் ராணி என டூயல் ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கி தற்போது ஐந்து வருடங்கள் ஆகின்றன. இந்த சீரியல் விரைவில் முடியவுள்ள நிலையில், ராதிகா தனது அடுத்த சீரியலை அவரின் ராடான் மீடியா ஒர்க்ஸ் மூலம் தயாரிக்கத் தொடங்கி விட்டார். இந்த சீரியலுக்கு ‘சந்திரகுமாரி’ என்று பெயர் வைத்துள்ளார். இந்த சீரியலில் ராதிகா 7 கேரக்டரில் நடிக்கிறாராம்
பாகுபலியின் சிவகாமி தேவி போன்று வெயிட்டான கேரக்டர் ராதிகாவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இந்தி சீரியல்களுக்கு போராடும் விதமாக ஒருபுறம் சுந்தர்.சி நந்தினி போன்ற பிரம்மாண்ட சீரியல்கள் தயாரித்து வெற்றி கண்டதை தொடர்ந்து, ராதிகா சரத்குமாரும் பிரம்மாண்ட பொருட்செலவில் சீரியலை தயாரிக்க முடிவெடுத்துள்ளார்.
இதற்காக சென்னை மற்றும் மும்பையில் மிகப்பெரிய செட்டுகள் போட்டு இந்த சீரியலின் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். இந்த சீரியலை ‘பாட்ஷா’ பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். ராதிகாவின் மகளாக ‘தாமிரபரணி‘ பட நடிகை பானு நடிக்கிறார். மேலும் நடிகைகள் ராதிகாவின் தங்கை நிரோஷா, உமா ரியாஸ்கான் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கு சிற்பி இசையமைக்கிறார்.
’சந்திரகுமாரி’ சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியல் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் அக்டோபர் மாத இறுதியில் தினமும் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
ராணி வேடத்தில் ராதிகா உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன.