முன்னாள் அதிகாரிக்கு 12 கோடி வழங்க இன்போசிஸூக்கு உத்தரவு

பணி விலக்க ஊதியமாக 12 கோடியே 17 லட்சம் ரூபாயை முன்னாள் தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சாலுக்கு வழங்குமாறு இன்போசிஸ் நிறுவனத்திற்கு விசாரணை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் இன்போசிஸ். இதன் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ராஜீவ் பன்சால். கடந்த 2015ம் ஆண்டு அவர் நிறுவனத்தை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது 24 மாத ஊதியமான 17 கோடியே 38 லட்சம் ரூபாயை அவருக்குத் தருவதாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அவ்வளவு பெரிய தொகையை முன்னாள் ஊழியருக்கு வழங்குவது குறித்து நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு எழுந்தது. ஆகவே, பன்சாலுக்கு 5 கோடியே 20 லட்சம் வழங்கிய நிலையில் நிலுவை தொகை நிறுத்தி வைக்கப்பட்டது.

நிலுவை தொகையை வழங்க உத்தரவிட கோரி, கடந்த ஆண்டு பன்சால் விசாரணை தீர்ப்பாயத்தை அணுகினார். தீர்ப்பாயம் 12 கோடியே 17 லட்சம் ரூபாயை வட்டியுடன் வழங்கும்படி இன்போசிஸூக்கு உத்தரவிட்டுள்ளது. மும்பை பங்கு சந்தைக்கான ஒழுங்குமுறை பதிவின்போது இன்போசிஸ் இதை தெரிவித்துள்ளது.

More News >>