கொத்தடிமைக்கு ஒரு படி அரிசி... ரூ.30 சம்பளம்

ஒரு படி அரிசி, 30 ரூபாய் சம்பளத்திற்காக 20 ஆண்டுகள் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 32 பேரை கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையிலான குழு மீட்டது.

தமிழகத்தில் 41 ஆண்டுகளாக கொத்தடிமை மீட்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் நடைமுறையில் இருந்தும், காலத்துக்கேற்ப, இந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்படாததால் கொத்தடிமை முறையை ஒழிக்க முடியாத நிலை தொடர்கிறது. இதற்கு உதாரணம்தான் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் இருந்து 32 கொத்தடிமைகள் மீட்கப்பட்ட சம்பவம்.

அங்குள்ள புலியூர் காட்டுசாகை என்ற பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் சேகர் என்பவர் 11 சிறுவர்கள் உள்பட 32 நபரை கொத்தடிமைகளாக பயன்படுத்தி வந்துள்ளார். தன்னார் அமைப்பினர் அளித்த தகவலின் அடிப்படையில், துணை ஆட்சியர் சரயூ தலைமையிலான குழு அங்கு விரைந்தது.

கரும்பு தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இருளர் சமூகத்தை சேர்ந்த 32 பேரை அந்த குழு மீட்டது. அவர்கள் அனைவரும் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 32 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

விசாரணையில், ஒரு படி அரிசி, 30 ரூபாய் சம்பளத்திற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 32 பேர் கொத்தடிமைகளாக அங்கு பணிபுரிந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த குள்ளஞ்சாவடி காவல்துறையினர், சேகர் என்பவரை தேடி வருகின்றனர்.

More News >>