முத்தலாக் குறித்து அவசர சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல்
முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இதன்மூலம் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இஸ்லாமியர்கள் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது.
ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அமைச்சரவை முடிவை ஏற்றுக் கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவசர சட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதன் மூலம் முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம். முத்தலாக் வழங்கிய பின் கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம். முத்தலாக்கில் கணவன் மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும்.