திருமலை பிரம்மோற்சவம்... மெகா தேரோட்டம்
திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8ஆம் நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த 13ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 7-ம் நாள் விழாவில், காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகனங்களில் உற்சவரான மலையப்ப சாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 8ஆம் நாளான இன்று மகா தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் உற்சவர்களான தேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி மகா ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ரதத்தை ஏராளமான பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது,ஏழுகுண்டல வாடா, வெங்கடரமணா கோவிந்தா... கோவிந்தா... என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோஷமிட்டனர்.
நான்கு மாட வீதிகளில் பவனி வந்த ரதத்துக்கு முன்பு, யானை, குதிரை பரிவட்டங்கள் சென்றன.மேள தாள வாத்தியங்களுடன் கலைஞர்கள் நடனமாடியபடி சென்றனர். நாளைய தினம், திருமலை அருகே உள்ள குளத்தில், சக்கர ஸ்நானம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.