டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் தொடங்கியது
புதுடெல்லி: ஏற்கனவே நடைமுறையில் உள்ள டெல்லி மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் வாகனங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2002ம் ஆண்டு முதல் டெல்லியில் மெட்ரோ ரயில்கள் இயக்குப்பட்டு வருகின்றன. நாள்தோறும் மெட்ரோ ரயில் பயன்பாடு அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய மெட்ரோ ரயில் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி, ஜானக்புரியில் இருந்து நொய்டா வரை 12.5 கி.மீ தூரம் வரை மெஜந்தா பிரிவில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன.இந்த வழித்தடம் நொய்டா நகரில் உள்ள தாவரவியல் பூங்காவை டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் பகுதியுடன் தற்போது இணைக்கும் வகையிலும், பின்னர் 38.23 கி.மீ நீளத்தில் ஜனக்புரி பகுதிவரை நீட்டிக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகலில் நடைபெற்ற இதற்கான விழாவில் 12.5 கி.மீட்டர் கொண்ட புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதியாநாத், கவர்னர் ராம் நாயக் ஆகியோருடன் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தில் பயணம் செய்தார்.