தமிழை விரும்பி படிக்கும் சீன மாணவர்கள்!

சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் மொழியை ஒரு பாடமாக சேர்த்திருக்கின்றனர். அங்கிருக்கும் மாணவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனராம்.

சீனாவில் இருக்கும் அந்த மாணவர்களுக்கு தமிழ் கற்று தரப்போவது  யார் தெரியுமா? ஒரு சீனப்பெண் தான். ஃப்யூ பே லின் எனும் பெண் தான் அங்கிருக்கும் மாணவர்களுக்கு தமிழ் கற்று தரவிருக்கிறார். தமிழ் மொழி மீது உள்ள ஆர்வம் காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியை முறைப்படி கற்றுக்கொண்டிருக்கிறார் ஃப்யூ பே லின்.

 தமிழ் மொழி குறித்து பேசும் போதே பரவசப்படும் ஃப்யூ பே லின், தமிழ் மொழியின் எழுத்து வடிவங்கள் படிப்பதற்கு மிகவும் கடினமானது. ஆனால் படித்த பிறகு மட்டுமே அதன் இனிமையை நம்மால் உணர முடியும். நான் தமிழ் மொழியை மிகவும் நேசிக்கிறேன். இந்த மொழியை எங்கள் மாணவர்களுக்கு சொல்லித்தருவதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். 4 ஆண்டுகள் நடக்கவிருக்கும் இந்த படிப்பில், மாணவர்களுக்கு முதலில் தமிழ் மொழியை கற்று கொடுத்துவிட்டு, பின்னர் தமிழ் இலக்கியங்கள் மற்றும் கலாச்சாரம் குறித்து கற்றுக்கொடுக்கும்படியாக தான் இந்த பாடத்திட்டத்தினை நாங்கள் அமைத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாடத்தின் ஒருபகுதியாக தமிழகத்திற்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துவந்து அந்த சுற்றுலாவின் மூலம் தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம் குறித்தும் எங்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர உள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழ் வழிக்கல்வியை குறைவாக மதிப்பிட்டு ஆங்கிலத்துக்கு நம் மாணவர்கள் மாறிக் கொண்டிருக்கின்றனரே என வருத்தத்தில் இருக்கும் நம் மக்களுக்கு , இந்த சீன மாணவர்கள் தமிழ் மொழி கற்க காட்டிடும் ஆர்வம் பெருமை தருவதாகவும் அமைந்திருக்கிறது. 

தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் என்று அன்றே பாடிய பாரதியின் கனவு இன்று சீனாவில் நனவாகி இருக்கிறது.

More News >>